Monday 26 January 2015

குடியரசின் உன்னத லட்சியங்களைஉயர்த்தி பிடிப்போம்...

1947 ஆகஸ்ட் 15 எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதற்குச் சற்றும் குறையாத சிறப்புள்ளதுதான் 1950 ஜனவரி 26. அரசின் அதிகாரப்பூர்வ மதமாக எதையும் அறிவிக்காத பெருமையோடு, அதிபர் ஆட்சி முறை சாராத கம்பீரத்தோடு, நாடாளுமன்ற முறையிலான அரசமைப்பு, பாகுபாடின்றி அனைவருக்கும் வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படைகளோடு அரசமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்த நாள் இது.டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சபை உருவாக்கியளித்த, 365 சட்ட உரைகளும் 8 அட்டவணைகளும் கொண்ட உலகிலேயே மிகப் பெரிய எழுத்துப்பூர்வ அரசமைப்பு சாசனம் நம்முடையது. அதில் திருத்தம் செய்யும் அதிகாரத்தை ஆட்சியாளர்களிடம் அல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்திற்கு வழங்கியிருப்பது மற்றொரு சிறப்பு.
அதன் அடிப்படையில்தான், இந்திய நாட்டின் தன்மையை திட்டவட்டமாக உறுதிப்படுத்தும் வகையில்சோசலிச, மதச்சார்பற்ற அரசாகஎன்ற திருத்தம் சேர்க்கப்பட்டது. மத்திய ஆட்சி, மாநில ஆட்சி என்ற ஈரடுக்கு முறையில் திருத்தம்செய்யப்பட்டு, 3வது அடுக்காக உள்ளாட்சி உறுதிப் படுத்தப்பட்டது. 22 மொழிகளை தேசிய மொழிகளாக அறிவித்திருக்கிற, கருத்து  வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிற சிறப்புகளும் இந்திய அரசமைப்பு சாசனத்திற்கு உண்டு.இத்தகைய சிறப்புகளைச் சீர்குலைக்கத் துடிக்கிற சக்திகள் தலைவிரித்தாடுகின்றன. மத்திய ஆட்சியதிகாரத்திற்கு BJP வந்திருப்பதை,என்ன வேண்டுமானாலும் செய்வதற்கானஉரிமமாக அப்பட்ட மான வலதுசாரி-மதவாதசக்திகள் எடுத்துக்கொண்டு செயல்படு கின்றன.
சோசலிச இலக்குக்கு நேர் மாறாக, உள்நாட்டு - வெளிநாட்டு மகா சுரண்டல் கூட்டங்களிடம் நாட்டின் பொருளாதாரத்தை ஒப்படைக்கிற சூழ்ச்சிகள் செயல்படுத்தப்படுகின்றன. குடியரசு நாள் விழா சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபருக்கு இவ்வளவு பாதுகாப்புகளோடு வரவேற்பளிக்கப்படுவது இந்த சூழ்ச்சிகளின் குறியீடுதான்.மதச்சார்பற்றஅரசு என்ற பிரகடனத்திற்கு எதிரான சதிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப் படுகின்றன. மறுபடியும் இந்தித் திணிப்பு, மத்தி யப் பள்ளிகளில் சமஸ்கிருதக் கட்டாயம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் புகுத்துகிற ஒற்றைக் கலாச்சார ஆதிக்கச் சிந்தனைகள், சமூகநீதிக்கான இட ஒதுக்கீட்டையே கேலிக்குள்ளாக்குகிற வகையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கிடும் நடவடிக்கைகள் என தொடர் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது என்றலட்சியம் புறக்கணிக்கப்பட்டு, புராணக் கற்பனைகளை அறிவியலாக ஏற்கவைக்கிற புரட்டுகள் பிரதமர் வாயிலிருந்தே வருகின்றன.கருத்துச்சுதந்திரத்தை முடக்க முனைவோர் முன்னெப் போதையும்விட ஊக்கம் பெற்றவர்களாக வலம் வருகிறார் கள்.இத்தகைய தாக்குதல்களிலிருந்து அரசமைப்பு சாசனத்தைப் பாதுகாப்பதோடு, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் மகளிர் இட ஒதுக்கீடு, தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக்குதல் உள்ளிட்டவற்றை நிறைவேற்றச் செய்வதற்கு ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்திட உறுதியேற்போம். இந்தப் போராட்ட உறுதியேற்பில்தான் அர்த்தம் பெறும். --- குடியரசு தின வாழ்த்துக்களுடன், எஸ்.சூரியன்.-D/S-BSNLEU.

No comments: