சத்தீஸ்கரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. மேலும் BJP வேட்பாளரை வென்று முதன் முறையாக இந்தியாவில் திருநங்கை ஒருவர் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. இங்குள்ள ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர் (35) என்ற திருநங்கை வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மஹாவீர் குருஜியை 4,537 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடையச் செய்துள்ளார். வெற்றி பெற்றுள்ள மது கின்னர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்.இவருடைய உண்மையான பெயர் நரேஷ் சவுகான். முன்பு இவர் ரயில்களில் பாட்டுப்பாடி, நடனம் ஆடி சம்பாதித்து வந்தார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள மது கின்னர், திருநங்கையாக மாறியதால் படிப்பைத் தொடர முடியாமல் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தார். இந்த நிலையில் மது கின்னர் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். மேயர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளது திருநங்கைகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டில் இந்த புதிய மாற்றம் மேலும் தொடர்ந்தால், திருநங்கைகளின் வாழ்வில் வசந்தம் வீசும் என்று கூறப்படுகிறது.வெற்றி பெற்ற பின்னர் மது கின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ராய்கர் நகராட்சி மேயர் தேர்தலில் நான் ரூ.60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை தான் செலவு செய்தேன். ஆனால் மக்கள் என் மீது கொண்ட அன்பாலும்,ஆசியாலும் என்னை வெற்றி பெற செய்துள்ளனர். ராய்கர் மக்களின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.தேர்தல் முடிவு குறித்து ராய்கர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நரேந்திர நெகி கூறியதாவது:- ராய்கர் நகராட்சி தேர்தலில் பிரதமர் மோடி அலை எதுவும் வீசவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் ஊழலால் மக்கள் வெறுத்து போய் இருந்தனர்.இதனால் தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க செய்துள்ளனர். இது மது கின்னருக்கு கிடைத்த வெற்றி அல்ல. பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த தோல்வி என்று தெரிவித்தார். தோல்வி பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேஷ் சர்மா கூறும்போது, மக்களின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். தோல்வி குறித்து ஆலோசனை நடத்துவோம் என்றார்.ராய்கர் நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட தற்போது பாரதிய ஜனதா கட்சி மேயராக இருக்கும் சவுகத்தா சீட் கேட்டார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்க பாரதிய ஜனதா கட்சி மறுத்து விட்டது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாஹாவீர் குருஜி என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டது.அவர் திருநங்கை மது கின்னரிடம் 4537 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.பாரதிய ஜனதா கட்சியால் சீட் மறுக்கப்பட்ட சவுகத்தா தேர்தல் பற்றி குறித்து கூறும்போது, மிகப்பெரிய கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களை மக்கள் புறக்கணித்து விட்டனர். இதில் இருந்து அரசியல் கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
1 comment:
வாழ்த்துவோம்
Post a Comment