Thursday, 5 September 2013

05.09.13 ஆசிரியர் தினம்....

இந்தியாவின்மிகச்சிறந்த தத்துவாசிரியரும்,மதங்களின் ஒப்பிலக்கிய அறிஞரும், இந்தியாவின் தலை சிறந்த விருதான பாரத ரத்னா ருதாளரும்,இந்தியாவின் 2வது குடியரசுத்தலைவருமான சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடு கிறோம். டெம்பிள்டன் விருது, காமன் வெல்த் ஆர்டர் ஆப் மெரிட், ஜெர்மன் புத்தக நிறுவனத்தின் அமைதிப்பரிசு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவர் சென்னை மாநிலக்கல்லூரி, மைசூர் மகாராஜா கல்லூரி, ஹாரிஸ் மான்செஸ்டர் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
இவருடைய பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது சாலப்பொருத்தமே.சிறந்த ஆசிரியர்கள் ஆழ்மனதில் இருந்து கற்பிக்கிறார்கள் என்று ஒரு ஆங்கிலச் சொலவடை உண்டு. வெறும் புத்தகங்களில் இருந்து கற்றுத் தருவது மட்டும் கல்வி அல்ல. இன்றைய நாட்களில் கல்வி என்பது ஒருபணம் சம்பாதிக்கப் பயன்படும் கருவியாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருதவறான பார்வையாகும். கல்வி என்பது பாடங் களை மட்டும் சொல்லித்தருவ தல்ல. மனித மாண்புகளையும், சமூக சிந்தனைகளையும், நன்னெறி களையும் சிறுவர்கள் முதல் அனைவருக்கும் சொல்லித் தருவதுதான் கல்வியாகும். எனவேதான் கற்பதற்கும், கற்றுத்தருவதற்கும் வயது இல்லை என்று கூறுகிறார்கள்.ஒரு பள்ளி அல்லது கல்லூரி சிறந்தது என்று அதன் ஆசிரியர் களின் தரத்தாலும், தகுதியாலும் அறியப்படுகிறது. விக்ரம் சாராபாய், ஹோமி ஜஹாங்கீர் பாபா, அப்துல் கலாம் போன்ற அறிவியலாளர்கள் தங்களுடைய வாழ்வில் தங்களது ஆசிரியர்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி பெரிதும் புகழ்ந்துரைத்துள்ளார்கள்.
ஒரு மாணவன் ஒரு மனிதனாக உருவாவதற்கு ஆசிரியர்கள் ஒரு பெரும் தாக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்களுடைய அனுபவங்களையும், நல்லெண்ணங்களையும், ஒரு பொருள், ஒரு சம்பவம், ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, போன்றவை குறித்து தங்களது கருத்துக்களையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டும் முன்னோடிகளாக இருக்கவேண்டும். பாடங்களையும், மனிதத்தையும், நல்லொழுக்கங்களையும் இனம், ஜாதி, மதம், மொழி என்ற பாரபட்சம் பாராது அனைவருக்கும் கற்றுத்தர வேண்டும் ஆசிரியர் தொழில் ஒரு உயர் வான தொழில் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஆசிரியர் தொழிலுக்கு வரும் அனைவரும் அர்ப்பணிப்பு மிக்கவராக இருக்க வேண்டும். மாநில தேர்வுகளில் முதலிடம் பெறும் மாணவர்கள் யாரும் ஆசிரியர் தொழிலுக்கு வருவதில்லை என்பது வருத்த மளிக்கும் தகவலாகும்.
அண்மை காலங்களில் படிப்பில் சிறந்த மாணவர்கள் தகவல் தொழில் நுட்பம்(ஐடி), மருத்துவம், பொறியியல் போன்ற பாடங்களையே தேர்வு செய்கிறார்கள். இவர்களில் ஆசிரிய தொழிலுக்கு வருகின்றவர்கள் இல்லை என்று கூறிவிடலாம். இந்நிலை மாற வேண்டும். ஆசிரிய தொழிலுக்கும் திறமையானவர்கள் வருவதை ஊக்குவிக்க வேண்டும். ஆசிரிய தொழிலில் ஈடுபட்ட பெருந்தகைகள் ஏராளமானோர் உண்டு. சாந்திநிகேதனைத் தொடங்கி நடத்திய ரவீந்திரநாத் தாகூர் அங்கு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அன்னை தெரசா ஒரு ஆசிரியையாக இருந்தவர்தான். கொல்கத்தா தூயமேரி உயர்நிலைப்பள்ளியில் பூகோளம் கற்றுக் கொடுத்த அன்னை தெரசா பின்னர் அப்பள்ளியின் முதல்வராகவும் பணியாற்றினார். பின்னரே அவர் தன்வாழ்வை சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும், புறக்கணிக்கப் பட்டவ்ர்களுக்காகவும் அர்ப்பணித்துக்கொண்டார்.  ஆசிரியர், அடுத்த தலை முறையை உருவாக்கும் ஒரு அரிய பணியை செய்கின்றவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களுக்குரிய இடத்தை சமுதாயத்தில் நாம் அளித்திட வேண்டும்.
ஆசிரியராக பணியாற்றுகின்றவர்களும் அதே பொறுப்புடன், கடமையுடன் ஆசிரியர் தொழிலுக்கு தங்களை அர்ப்பணித்திக்கொண்டு அடுத்த தலைமுறையை சிறந்ததாக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.



No comments: