இந்திய அரசுக்கு சொந்தமான
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
செய்திருப்பது, கச்சத்தீவு குறித்த வரலாறு தெரியாத நிலையை காட்டுகிறது என இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு திங்கள்கிழமை
தெரிவித்தார்.
இதுகுறித்து
அவர் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: ராமநாதபுரம் சேதுபதி
மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை கீழக்கரை ராவுத்தருக்கு குத்தகைக்கு விட்டு
நிர்வாகம் செய்ததாக வரலாறு உள்ளது.கடந்த காலத்தில் மத்திய அரசு பலமுறை இலங்கை
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கச்சத் தீவை தமிழக மீனவர்களும் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என இரு அரசுகளும் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாரை
வார்த்து கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பின்பற்றாமல் அதிகாரிகள் மாற்றி விட்டனர். இந்த
வரலாறு தெரியாமல் கச்சத் தீவை இலங்கைக்குச் சொந்தமானது என மத்திய அரசு உச்ச
நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது வருத்தத்துக்குரியது. இதனால் இந்திய
மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீன்பிடிப் படகுகள் சேதப்படுத்தப்படுவதும்,
இலங்கை சிறையில் அடைத்து துன்புறுத்துவதும் நடந்து வருகிறது. மத்திய அரசு கச்சத்
தீவை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில்
வரலாறு காணாத அளவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் தவறான கொள்கையால் பொது நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. 75 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு
கீழ் வாழ்கின்றனர். மக்களவைத் தேர்தலுக்கு நாள்கள்
அதிகம் உள்ள நிலையில், பாஜக., நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராகவும், காங்கிரஸ் கட்சி
ராகுல் காந்தியை முன்நிறுத்தியும் பிரசாரம் செய்கின்றனர். இந்தியப்
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் கட்சிகளின் கொள்கைகளை முன்நிறுத்தாமல்,
தனி நபரை முன்நிறுத்தி மக்களை திசைமாற்றி ஆட்சியைக் கைப்பற்ற முயல்வது ஜனநாயகத்துக்கு
உகந்தது அல்ல என்றார் நல்லகண்ணு
No comments:
Post a Comment