உத்தர பிரதேசத்தில், மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியின் போது, பர்ஹாஜ் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், ராம்பிரசாத் ஜெய்ஸ்வால். மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த, பாபு சிங் குஷ்வாஹாவுடன் சேர்ந்து, மத்திய அரசின் சுகாதார திட்டங்களில், ஏராளமான முறைகேடுகளை செய்து, மோசடியாக பணம் சம்பாதித்தார்.
மத்திய அரசு திட்டங்களை, உ.பி.,யில் செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களிடம், மூன்று சதவீத கமிஷன் பெற்று, பணிகளை அந்த நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். இதில், அமைச்சர் குஷ்வாஹாவுக்கும், பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகளை விசாரித்த, சி.பி.ஐ., முன்னாள் எம்.எல்.ஏ., ஜெய்ஸ்வால் மற்றும், முன்னாள் அமைச்சர், குஷ்வாஹா மீது வழக்கு தொடர்ந்து, அவர்கள் மீதான குற்றங்களில், குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்தது.
இவர்கள் மீதான நிதி முறைகேடு வழக்குகளை, அமலாக்க இயக்குனரகமும் விசாரித்து வந்தது. அதில், சி.பி.ஐ., தாக்கல் செய்த வேண்டுகோளின் படி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜெய்ஸ்வால் சொத்துகளை பறிமுதல் செய்ய, முடிவு செய்யப்பட்டது.
அம்மாநிலத்தின் பல இடங்களில் உள்ள, ஜெய்ஸ்வாலுக்கும், அவர் மகனுக்கும் சொந்தமான பண்ணை வீடுகள், கட்டடங்கள், விவசாய நிலங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 27 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment