மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான எம்.பசவபுன்னையாவின் மனைவி தோழர் ஜெகதாம்பா ஐதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது (94). இளம்வயதிலேயே சமூக - அரசியல் பிரச்சனைகளில் ஆர்வத்துடன் பங்கேற்று செயல்பட்ட தோழர் ஜெகதாம்பாவை, அவரது சகோதரரான எல்.பி. கங்காதரராவ் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அறிமுகப்படுத்தினார்.தோழர் எல்.பி.கங்காதரராவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக பிற்காலத்தில் செயல்பட்ட மாபெரும் தலைவராவார்.
1943ல் விஜயவாடாவில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பெண் ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற தோழர் ஜெகதாம்பா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் பி.சுந்தரய்யா மற்றும் சி.எச்.ராஜேஷ்வரராவ் ஆகியோர் எடுத்த கம்யூனிஸ்ட் தத்துவம் தொடர்பான வகுப்புகளால் ஈர்க்கப்பட்டார். வரலாற்றுப் புகழ்பெற்ற தெலுங்கானா ஆயுதப்புரட்சியில் தலைவர் களிடையே தகவல்களைப் பரிமாறும் ‘கூரியராக’ ஜெகதாம்பா செயல்பட்டார்.
சென்னையிலிருந்து ஒரு சாதாரணப் பெண்ணாக ரயில்களில் ஆயுதங்களைக் கொண்டு சென்று தெலுங்கானா புரட்சியாளர்களுக்கு சப்ளை செய்யும் பணியையும் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கொண்டார். அந்த சமயங்களில் தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மராத்தி என பல மொழிகளிலும் பேசி பிரிட்டிஷ் போலீசாரிடமிருந்து மிக எளிதாக தப்பித்தும் வந்தார்.
தனது வாழ்நாள் முழுவதையும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக அர்ப்பணித்த தோழர் ஜெகதாம்பா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவராக வலம்வந்த தோழர் பசவபுன்னையாவின் வாழ்க்கைத் துணையாக கட்சிப்பணிகளுக்கு ஊக்கமளித்தார்.
No comments:
Post a Comment