Wednesday 22 January 2014

கருணை மனு : வீரப்பன் கூட்டாளி 4 பேர் தூக்கு ரத்து

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வீரப்பன் கூட்டாளிகள் சைமன், பில்வேந்திரன், ஞானபிரகாசம், மீசை மாதையன் ஆகிய 4 பேரும், கடந்த 1993–ஆம் ஆண்டு தமிழககர்நாடாக எல்லையான பாலாறு பகுதியில் கண்ணி வெடி தாக்குதல் நடத்தியதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 22 பேர் பலியாக காரணமாக இருந்ததாக 4 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடகா மாநில மைசூர் தடா நீதிமன்றம், கடந்த 2001-ஆம் ஆண்டு வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.தடா நீதிமன்றத்தின் தூக்கு தண்டனையை எதிர்த்து 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் உச்ச நீதிமன்றமும் 2004-ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.இதனையடுத்து, தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்க கோரி 4 பேரும் 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அந்த மனுக்களை ஒன்பது ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு (2013) பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதனையடுத்து, கருணை மனுக்களை நிராகரிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதால், தூக்கு தண்டனையை குறைக்க கோரும் உரிமை உள்ளது எனக் கூறி, நால்வர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரது தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு அளித்துள்ளது.

No comments: