Sunday 5 January 2014

மோடி பொறுப்பேற்றால் நாட்டிற்கு பேரழிவாக முடியும்

ராகுல்,மோடி-யார்வந்தாலும் நாட்டிற்கு பேரழிவே
ஆம்ஆத்மிகட்சி

நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பிறகு ராகுல் காந்தியோ அல்லது நரேந்திர மோடியோ இவர்களில் யார் பிரதமர் ஆனாலும் நாடு பேரழிவைச் சந்திக்கும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.வெள்ளியன்று தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் செய்தி யாளர்களுக்கு பேட்டி யளித்தார். பேட்டியில் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசிய மன்மோகன் சிங், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் அது நாட்டிற்குப் பேரழிவாக அமையும் என்று குறிப்பிட்டார். தில்லியில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள ஆம் ஆத்மி கட்சி பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். புதிதாக ஆட்சிக்கு வந்திருப்பதால் அவர்களைப் பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என பிரதமர் குறிப் பிட்டிருந்தார்.இந்நிலையில், பிரதமரின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், நாட்டில் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலோ, விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துவதிலோ, ஊழலை தடுப்பதிலோ தமது அரசு தோல்வியடைந்துவிட்டது என்பதை பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்; அவர் அப்படி ஒப்புக்கொண்டபோதே இந்த நாட்டை ஆட்சி செலுத்துகிற தார்மீக உரிமையை காங்கிரஸ் இழந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சி குறிப் பிட்டுள்ளது. “பேட்டியின்போது, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றால் அது நாட்டிற்கு பேரழிவாக முடியும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். இது ஒருபகுதி உண்மை என்றே கொள்ளலாம். ஏனென்றால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தியா அல்லது நரேந்திர மோடியா என்றும் இந்த இருவரில் ஒருவரை தேர்வு செய்யுமாறும் இந்திய மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்; அப்படி இருவரில் எவர் வந்தாலும் அது இந்த நாட்டிற்கு பேரழிவாகவே முடியும் என்றே நாங்கள் கருதுகிறோம்எனவும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

No comments: