Monday, 20 January 2014

ரயில்வே பணிகள் தேய்ந்து வருகிறது - உண்மை உரை கல்லாகிவிடும்...

கரைந்துவரும்தென்னகஇரயில்வேயின்பணிகள் - .ஜோதிராம்
போக்குவரத்திற்கும், சரக்குகள், பொருட்கள் கொண்டு போவதற்கு இரயில்வேயை போல் சிறந்த வாகனம் எதுவுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியான விசயம். மாவட்டங்கள் தொடங்கி மாநிலங்கள் வரையிலான தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சியின் ஒருபகுதி ரயில்வேயின் கையில்தான் இருக்கிறது.ஆனால், தமிழகத்தில் ஏராளமான இரயில்வேயின் திட்டங்கள் பன்னெடுங் காலமாக தூங்கி வருவது எல்லோரும் அறிந்த ஒன்றே. அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்கள் படுகின்ற பாடு சொல்லி மாளாத ஒன்று.மதுரை கோட்ட ரயில்வே மேலாளர்,ரஸ்தோகி சில விபரங்களை கூறியுள் ளார். அதில் குறிப்பிடத்தக்கது திண்டுக்கல் லுக்கும் மதுரைக்குமான மின்பாதையில் ரயில்கள் இயக்குவது ரயில்வே ஆணையரின் அனுமதி கிடைத்தவுடன் துவங்குமென்பதாகும். இதை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.ஏனெனில், திண்டுக்கல் - மதுரை மின் பாதை பணிகள் பூர்த்தியாகி ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. முறையான பரிசோதனை ஓட்டங்களும் முடிந்துவிட்டது. இதை ரஸ்தோகியும் ஒப்புக் கொள்கிறார். ஆனாலும், மின்பாதையில் ரயில்கள் ஓடத்துவங்கவில்லை. இதற்கு முதன்மை பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் வேண்டு மாம். அதற்காக 2 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பதும் நடக்கிறது. பாதுகாப்பு ஆணையருக்கு 2 வருடங்களாக இதற்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறதென்று தெரியவில்லை.பிள்ளைக்கு பேரு வைக்க மறந்த பெற்றோரின் கதையாக இது இருக்கிறது. 60 கிலோ மீட்டர் ரயில் பாதைக்கே இந்தகதி என்றால், செங்கல்பட்டிலிருந்து திண்டுக்கல் வரை நடைபெற வேண்டிய இரட்டை வழி பாதைகளின் நிலைமைகளை நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆமை வேகமா, நத்தை வேகமா என்று கேள்வி எழுப்பினால் இரண்டையும் மிஞ்சிவிடும் அளவுக்கு தென்னக ரயில்வேயின் வேகமுள்ளது என்பது வேதனையான விஷயம். பல இடங்களில் இப்போதுதான் பாலம் கட்டும் பணிகளையே துவங்கியிருக்கிறார்கள். துவக்கமே இப்போது தான் என்றால் முடிவது எப்போது என்று தெரியவில்லை. சில இடங்களில் நில ஆர்ஜிதத்தோடு மட்டுமே வேலைகள் இருக்கிறது. இந்த 325 கிலோமீட்டர் வேலைகள் பூர்த்தியாகி அதில் சோதனை ஓட்டம் தொடங்க எவ்வளவு ஆண்டுகள் பிடிக்குமோ தெரியவில்லை. சோதனையிலும் இது பெரிய சோதனைதான்.இப்படி ஆமை வேகத்தில் ரயில்வேயின் வேலைகள் நடந்தால் எப்படி அது பயணி களுக்கு பயனளிக்கும்? தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்பதை ரயில்வே நிர்வாகம்தான் சொல்ல வேண்டும்.முடிவடைந்த திட்டங்களே இப்படி இருக் கும்போது தொடங்க வேண்டிய ஒரு திட்டம் பற்றி தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு இதன்மூலம் சொல்ல வேண்டியுள்ளது. அதாவது, மதுரையிலிருந்து - விருதுநகர் - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னி யாகுமரிக்கும், தூத்துக்குடிக்கும், தென் காசிக்கும் ஒரே ரயில்வே வழித்தடம்தான் உள்ளது. இதனால் நெல்லை வழியாக மதுரைக்கு வரும் ரயில்களும், தூத்துக்குடி வழியாக மதுரை வரும் ரயில்களும், செங் கோட்டை - தென்காசி வழியாக வரும் ரயில்களும், விருதுநகருக்கு வந்ததற்கு பின்னால் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் மதுரை வர வேண்டும். இதனால் அன்றாடம் இந்த வழித்தடங்களில் வரக்கூடிய ரயில்கள் எதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மதுரை வந்து சேருவது அபூர்வமாகிவிட்டது. பயண நேரமும் தேவை யில்லாமல் அதிகமாகிறது. இதற்கிடையில், சரக்கு ரயில்களும் வந்துவிட்டால் சொல்ல வேண்டியதே யில்லை.. மிகுந்த காலதாமதம் ஏற்படும். இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் படுசிரமத்திற்கு அன்றாடம் ஆளாகி வருகிறார்கள். அரியலூரிலிருந்து தூத்துக்குடி வழியாக செல்ல வேண்டிய சிமிண்ட், சென்னையில் இருந்து வரக்கூடிய தென்மாவட்டங் களுக்கான இதர பொருட்கள், அதேபோல் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வட மாவட்டங்களுக்கு போய்ச் சேரவேண்டிய நிலக்கரி, பெட்ரோல், டீசல், இதர வகை உண வுப்பொருட்கள் ஆகியவை குறித்த நேரத்தில் போய் சேருவதில் தேவையற்ற மிகப்பெரிய காலதாமதம் ஏற்படுகிறது.மதுரைக்கும், விருதுநகருக்கும் இடையே இரட்டை ரயில் பாதை வேலைகள் பூர்த்தி யானால் மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங் களில் வளர்ச்சிக்கு அதுவொரு மைல்கல் லாக அமையும். ஆனால், நடைமுறையோ படுமோசமாக இருக்கிறது. நடைமுறைப்படுத்த வேண்டிய மிக அவசியமான இந்த திட்டம் சிந்தனைக்கு வழியின்றி சிதறி போய் கிடந்தது ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாட்டில் ஒரு கரும்புள்ளியாகும்.மேற்சொன்ன அவசியங்களை உணர்ந்து இனியாவது தென்னக ரயில்வே நிர்வாகம் தென்மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நடக்கிற வேலைகளை விரைவு படுத்தியும், தொடங்க வேண்டிய வேலைகளை காலத்தில் தொடங்க வேண்டும். இல்லையெனில், தென்மாவட்டங்களில் தென்னக ரயில்வேயின் பணிகள் தேய்ந்து வருகிறது என்பது உண்மை என்பதற்கு உரை கல்லாகிவிடும்.


No comments: