Friday, 3 January 2014

கல்யாணி மதிவாணனை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் குளறுபடி - மாணவர்கள் முற்றுகை : போலீஸ் தாக்குதல்
மதுரை ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ஆரோக்கியமான கல்விச் சூழலைகெடுத்து மாணவர் - ஆசிரியர் விரோத நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ள துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், இதர கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சி யரகங்களை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சி மாகாளி, மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசினால் 1965-ல் துவங்கப் பட்டு இன்று இந்திய அளவில் மிக முக்கிய பல்கலைக்கழகமாக மற்றும் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் உயர்கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது.அத்தகைய பெருமைமிகு பல்கலைக்கழகத்தின் முதல் பெண்துணைவேந்தராக 2012 ஏப்ரல் மாதம் பொறுப்பேற்ற முனைவர். கல்யாணிமதிவாணன் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுவார் என்ற அனைவரின் எதிர்பார்ப்பையும், தனது அராஜக மான நடவடிக்கை மூலம் பொய்யாக்கியுள்ளார்.தொடர்ந்து மாணவர்-ஆசிரியர் விரோத நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்த மாணவர்கள் விடுதியை இழுத்து மூடியது, விடுதி உணவுக் கட்டணத்தை உயர்த்தியது போன்ற அராஜக நடவடிக்கையை கண்டித்தும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, நூலகம், ஆய்வகம், கல்வி உதவி தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் கடந்த 2 மாதகாலமாக மாணவர்கள் தொடர்போராட்டத்தினை நடத்திவருகின்றனர்.மாணவர்களின் போராட்டத்தின் தன்மையை உணர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என துணைவேந்தர் வாக்குறுதி அளித்தார்.ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பழிவாங்கும் விதமாக மாணவர்கள் பெற்றோர்களை பல்கலைக்கு அழைத்து வரவேண்டுமெ  ன்றும், அதேபோல் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஆய்வு மாணவர் ஜெகநாதன் மற்றும் சகமாணவர்களை குண்டர்களை வைத்து மிரட்டியது, இரண்டு ஆய்வு மாணவர்களை பல்கலையிலிருந்து நீக்கம் செய்தது, போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட தொடர் அராஜக நட வடிக்கையில் துணைவேந்தர் இறங்கியுள்ளார். மாணவர்களின் போராட்டத்தை தடுக்க பல்கலையை இழுத்து மூடினார்.மாவட்ட ஆட்சியரகங்கள் முற்றுகை : இத்தகைய போக்கினைக் கண்டித்தும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய நான்கு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புகண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.இப்போராட்டங்களில் காவல்துறையினர் அராஜகமாக மாணவர்களை தாக்கியுள்ளனர். ஏராளமான மாணவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். சங்கத்தின் மாநில செயலாளர் ஜோ.ராஜ்மோகன், மாநில தலைவர்கள் ரெ.ஸ்டாலின், வீ.மாரியப்பன், .சரவணத்தமிழன், எம்.கண்ணன், மாநிலகுழு உறுப்பினர்கள் பாரதி, ஆதவன் உள்ளிட்டோர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எம்.பாலாஜி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
தகுதிநீக்கம் செய்க! : பல்கலைக்கழகத்திற்குள் காவல் துறையை ஏவி, மாணவர்களையும், பேராசிரியர் களையும் பல்கலை. வளாகத்துக்குள் புகுந்து கைதுசெய்யச் செய்த நடவடிக்கை தமிழகத்தில் வேறு எந்த பல்கலை.யிலும் நடைபெறவில்லை.கடந்த மாதம் அந்த மோசமான சம்பவம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்கவும். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், மாணவர்களின் போராட்டத்தை எப்படி அணுகுவது என்பதையும் தெரியாத, தேர்ச்சி பெறாத துணை வேந்தராகவே கல்யாணி மதிவாணன் உள்ளார்.பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியராக மட்டுமே இருந்து, பேரம் பேசி, அதன் மூலம் துணைவேந்தராக வந்த கல்யாணி மதிவாணன் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் முன்னிற்கமாட்டார்.மாணவர், ஆசிரியர் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் கல்யாணி மதிவாணன் துணை வேந்தர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும்மென தமிழக அரசை இந்திய மாணவர் சங்கம் SFI வலியுறுத்துகிறது.
போராட்டம் : மேலும், நான்கு மாவட்ட ஆட்சி யரகங்கள் முன்பும் வெள்ளியன்று நடந்த போராட்டத்தில் மாணவர் சங்க தலைவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்தும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளை முன்வைத்தும் உடனடியாக தமிழகம் முழுவதும் அனைத்து தலைநகரங்களிலும் கண்டன போஸ்டர்கள் வெளியிட்டும், கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டுமெனவும் SFI சங்கத்தின் அனைத்து மாவட்டக்குழுக்களையும் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.மேலும் 03.01.2014 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டமைப்பு அனைத்து சங்கங்கள் சார்பாக ,நோட்டீஸ்.போஸ்டர்,தெருமுனை பிரச்சாரம்,பேரணி,மாநில அரசுக்கு மகஜர் அளிப்பது ,மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து மகஜர் அளித்து தலையிட கோருவதி உள்ளிட்ட இயக்கங்களை நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. 

No comments: