Monday, 20 January 2014

பேனர் வைப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியை பின்பற்ற வேண்டும்....

இடையூறு இல்லாத பேனர் பின்பற்றுவார்களா பிற கட்சியினர்?
மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் டிஜிட்டல் பேனர்களை வைப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியை பிற அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டும் என்று காஞ்சிபுரம் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர்.அரசியல் கட்சிகள், அரசு விழாக்கள், சினிமா, கோயில் திருவிழாக்கள் ஆகியவற்றை தொடர்ந்து திருமணம், காதுகுத்து, பிறந்தநாள், கண்ணீர் அஞ்சலி என்று டிஜிட்டல் பேனர் கலாச்சாரம் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது.செல்ல விலங்குகளுக்குக் கூட சிலர் பேனர் வைத்து தங்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். வளர்ந்து வரும் நாகரிக உலகில் டிஜிட்டல் பேனர் முக்கிய இடத்தை பிடித்துவிட்டது.சாலைகளை அடைத்துக் கொண்டு, பார்த்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் பேனர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்று மிரட்டுவது மக்களுக்கு பழகியேவிட்டது.சிலர் இந்த பேனர்களால் ஏற்படும் இடையூறைத் தடுத்து நிறுத்தசட்டம் தலையிட்டே ஆக வேண்டும் என நீதிமன்ற வாசலுக்கும் சென்று நீதியும் பெற்றாகிவிட்டது.எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் தொடர்ந்து சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன.பெரும்பாலான கட்சியினர் சிறிய அளவில் என்று கூறி பேனர்கள் வைத்தாலே சுமார் 7 அடி அகலம், 10 அடி உயரம் என்ற அளவில் இருக்கும். அதிகபட்சம் ஒரே பேனரில் நான்கு, ஐந்து வணிக நிறுவனங்களை மறைக்கும் அளவுக்கு வைத்துவிடுவார்கள். மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் பேனரின் அடக்கத்தை பார்த்து காஞ்சிபுரம் மக்கள் பெருமையோடு மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காஞ்சிபுரம் காந்திசாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.இதற்காக, காஞ்சிபுரம் காந்தி சாலையில் இக்கட்சியினர் வணிகநிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் 2 அடி அகலம், 10 அடி உயரத்தில் சிறிய அளவிலான 50 டிஜிட்டல் பேனர்களையே வைத்துள்ளனர். இது அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் கூறியது: அதிமுக, திமுக, காங்கிரஸ் என அனைத்து முன்னணி கட்சிகளும் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு 10 நாள்களுக்கு முன்பே மெகா டிஜிட்டல் பேனர்களை வணிக நிறுவனங்களை மறைக்கும் வகையில் வைத்து விடுவார்கள். இதனால் வியாபாரம் கடுமையாக பாதிப்பதுடன், பொதுமக்களும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். உயர்நீதிமன்ற உத்தரவுகளை யாரும் கடைப்பிடிப்பதும் இல்லை.இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசக் கூட முடியாது. அந்தவகையில் கம்யூனிஸ்ட் கட்சியினர், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர்.இதுபோன்ற அளவில்தான் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும் என்று அனைத்து முன்னணி கட்சியினருக்கும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அறிவுறுத்த வேண்டும்.இதனை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர,அரசியல் கட்சிகளும் சமூக ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை மதித்துச் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.                    நன்றி.....  (தினமணி - 19 )

No comments: