Saturday 11 January 2014

மோடி-சந்தோஷம் மனித குலத்துக்கே பேரழிவாய் முடியும்.

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறக் கூடாது!
அன்புள்ள மோடிவணக்கம்.
அன்புள்ள என்பது சம்பிரதாயம் அல்ல. நாகரிகம் அடைந்த மனிதனால் இன்னொரு மனிதனை வெறுக்க முடியாது. ஒருவருடைய கருத்துக்கள் தவறானவை எனில், அவற்றை வெறுக்கலாம். மனிதனை அல்ல!
தங்களது வலைப்பூவில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் யாரையும் உலுக்கிவிடும். நானும் விதிவிலக்கல்ல. அனைவரையும் சகோதர, சகோதரிகளே என்று அழைத்திருக்கிறீர்கள். சகோதர, சகோதரிகளின் உரிமைகளில் ஏற்றத்தாழ்வு இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரையும் அப்படித்தான் தாங்கள் கருதுகிறீர்களா? ''இந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாதோர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள்... அனைவரும் இந்துக்களாக மாற வேண்டும் அல்லது, இரண்டாந்தர குடிமக்களாக அடங்கியிருக்க வேண்டும்'' என்கிற உங்கள் தாய் ஸ்தாபனத்தின் கருத்துக்களை மறுதலிக்கிறீர்களா? அப்படி வெளிப்படையாக நீங்கள் பேசாத பட்சத்தில், இந்த வார்த்தைகள் உணர்வல்ல; வெறும் வார்த்தைகள் மட்டுமே. இவை கபடத்தனமானவை; பெரும் துயரத்துக்கான அழைப்பு என்பதைத் தவிர வேறில்லை.இரண்டாவதாக மிக மோசமாக பூகம்பத்தின் பாதிப்பையும் முஸ்லிம் மக்கள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையையும் நளினமாகவும் லாகவமாகவும் இணைத்திருக்கிறீர்கள். அதன் மூலம் இரண்டும் இயற்கையானவை; தடுத்திருக்க முடியாதவை என்று நம்பவைக்க முயற்சிக்கிறீர்கள்.இரண்டும் ஒன்றுதானா? பேரழிவின் உக்கிரம், உயிரிழப்பு, பொருட்சேதம் இவையெல்லாம் ஒப்பிடத்தக்கவையே. ஆனால், காரணம் ஒப்பிடத்தக்கதா? பி.ஜே.பி-யின் அதிகாரப்பூர்வ ஊடகத் தொடர்பாளராக இருந்த வி.கே.மல்கோத்ரா, 'குஜராத் படுகொலைகளுக்காக நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்றால், பூகம்ப அழிவுகளுக்காக கேசுபாய் பட்டேல் பதவி விலகியிருக்க வேண்டுமா?’ என்று கேட்டார். அதே மனநிலையில்தான் தாங்களும் இன்று இருக்கிறீர்கள் என்பதை உங்களால் மறைக்க முடியவில்லை.மூன்றாவதாக, 'நான் அடியோடு கலங்கிப்போனேன். துக்கம், வருத்தம், துயரம், வலி, மனவேதனை, துயரம் இந்த வார்த்தைகள் எதுவும் அந்த மனிதாபிமானம் அற்ற செய்கையை உணர்ந்தவர்களின் துயரத்தை பிரதிபலிக்க சக்தி அற்றவைஎன்று உங்கள் கடிதம் கூறுகிறது.
அது உண்மையானால் மிக்க மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் உண்மையாகப் பேசியிருக்கிறீர்களா...? ''குஜராத்தின் ஒட்டுமொத்த மக்களும் ஆத்திரப்பட்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டால் (வன்முறைகள்) இன்னும் மோசமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது'' என்று பேசியிருக்கிறீர்கள். இன்னும் மோசம் என்றால் எதை எதிர்பார்த்தீர்கள்? குஜராத்தின் எந்த மூலையிலும் யாதொரு முஸ்லிமும் இல்லாத அளவுக்கான அழித்தொழித்தலையா? ஒருவேளை நீங்கள் சொல்லக்கூடும், இது எங்கள் கணிப்பென்று. ஆனால், 2002 மார்ச் 3-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் கூறினீர்களே... அந்த அவக்கேடான வார்த்தைகள் உண்மையான மோடியை உலகுக்குக் காட்டியது.'இத்தனை காட்டுமிராண்டித்தனங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதே?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, உங்கள் அறிவியல் அறிவை வெளிப்படுத்தி விளக்கினீர்கள். நியூட்டனின் மூன்றாவது விதியைக் கூறினீர்கள். ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்ச்செயல் நடக்கும் என்று கூறினீர்கள். இதுதான் தாங்கள் துயரத்தை வெளிப்படுத்திய முறை. தாங்கள் வருத்தப்பட்டு பாரம் சுமந்த கதையை, இந்த ஒற்றை வாக்கியம் பளிச்சென்று சொல்கிறது.பல பேரைக் கொன்றவர்கள், குழந்தைகளைக் கொன்றவர்கள், காமக்கொடூரர்கள் இவர்களையெல்லாம் விசாரித்து தூக்கில் போடும்போதுகூட, தூக்கிலிடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள்கூட, ஒரு உயிர்போவதைக் கண்டு, மரணத்தின் வலி கண்டு உடைந்து நொறுங்கியிருக்கிறார்கள். அப்பாவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதை, கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருவை ஆயுதத்தால் குத்தி கூட்டமாய் நின்று நெருப்பில் பொசுக்கியதை, நியூட்டனைத் துணைக்கு அழைத்து நியாயப்படுத்துவதுதான் நீங்கள் துயரம் அடைந்ததை வெளிப்படுத்தும் முறையா... அல்லது, நாகரிகம் வளர்கிறபோது காண்டுமிராண்டித்தனமும் கூடவே வளரும் என்று சொல்லும் முறையா?காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இஷான் ஜாஃப்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் 19 பேரும், அந்த அடுக்குமாடியில் இருந்த 68 பேரும் உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அது குறித்து பத்திரிகைகள் கேட்டபோது அவர் தனது கைத்துப்பாக்கியால் சுட்டதால்தான் கொளுத்தப்பட்டார் என்று கூறினீர்கள். ஏன் சுட்டார் என்ற கேள்விக்கு, அது அவருடைய இயல்பான குணமாக இருக்கலாம் என்றீர்கள். பின்னர் பத்திரிகைகள் எழுதின... 'இஷான் ஜாஃப்ரி சிறந்த நூலகம் ஒன்றை வைத்திருந்தார். அந்த நூலகத்தில் சிட்டுக்குருவி கூடுகட்டி அடைகாத்திருந்தது. ஃபேன் சுற்றினால் பறக்கும் குருவிக்கு காயம் ஏற்படும் என்பதால், ஃபேன் சுவிட்சையே ஆன்செய்ய முடியாமல் ஒட்டி வைத்திருந்தார் என்று.ஒரு வாதத்திற்காக அவர் சுட்டார் என்று வைத்துக்கொண்டால்கூட, அந்தக் குடும்பத்தில் இதர 19 பேர் (குழந்தைகளும் அடக்கம்) என்ன பாவம் செய்தார்கள்? இதுதான் நீங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாமல் வருத்தத்தை அனுபவித்த முறையா?இதேபோன்று பந்வாரா கிராமத்தில் 38 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்டதை  குறிப்பிட்டதுதான் உங்கள் சொல்ல முடியாத துயரமா?
நான்காவதாக, சிறுபான்மை மக்களின் மீது ஒரு அழித்தொழித்தல் நடவடிக்கை நடந்துகொண்டிருந்தபோது என்றாவது, 'அதை நிறுத்துங்கள்என்று நீங்கள் பேசியது உண்டா? அப்போதைய பிரதமர் திரு.வாஜ்பாய் கூட 'இந்த தேசத்தின் நெற்றியில் கரும்புள்ளி’. 'இந்தப் படுகொலையில் குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டது உலகின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்துள்ளதுஎன்று குறிப்பிட்டார். தாங்கள் எப்போதாவது அப்படி பேசியது உண்டா? வன்முறை என்கிற வார்த்தையைக்கூட பயன்படுத்தியது இல்லையே? ''இயற்கையான கோபத்தின் வெளிப்பாடு'' என்றல்லவா கூறினீர்கள்.இறந்தவர்களின் குடும்பத்துக்கான இழப்பீட்டில்கூட ஓரவஞ்சனை காட்டினீர்கள். ரயில் எரிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும், வன்முறையில் எரித்தும் வெட்டியும் உயிரோடு புதைத்தும் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும் என்று அறிவித்தீர்கள். கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் அனைவருக்கும் ரூ.1 லட்சம் என்று அறிவித்தீர்கள். ரூ.2 லட்சம் என்றால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே குறைத்தீர்கள்.உங்கள் கரிசனத்தில்கூட சரிசமம் இல்லை என்பதை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். இதுதான் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலியின் வெளிப்பாடா? காட்டு மிராண்டித்தனமான படுகொலைகளை உங்கள் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. உங்கள் காவல் துறைத் தலைவர் சமூக உணர்வு காவல் துறையிலும் பிரதிபலிக்கும் என்று நியாயப்படுத்தினார். போலீஸ் வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல; பல இடங்களில் காட்டுமிராண்டித்தனமான கும்பலுக்குத் துணைபோனதை ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன.போலீஸ் வண்டியைப் பார்த்து கலவரக்காரர்கள் தயங்கியபோது போலீஸ் அவர்களை ஊக்கப்படுத்தி கைக்காட்டியதும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் பங்கு வாங்கிச் சென்றதும்கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யார் மீதாவது நீங்கள் நடவடிக்கை எடுத்தது உண்டா? மோடி அவர்களே... துக்கம் தொண்டையடைக்க இன்று வரை செய்வதறியாது நிற்கிறீர்களோ?
உங்கள் காவல் துறை கலவரத் துறையாகிவிட்டது. ராணுவம் வந்தது. ஆனால், அதை நீங்கள் பயன்படுத்தாமல் காலம் தாழ்த்தினீர்கள். ஏனென்று கேட்டால், 'ராணுவத்துடன் ஒரு மேஜிஸ்திரேட் செல்ல வேண்டும். மேஜிஸ்திரேட் கிடைக்கவில்லைஎன்றீர்கள். இதுவெல்லாம் உங்கள் மனவேதனையின் வெளிப்பாடுதான் என்கிறீர்களா?இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இந்த 10 காலத்தில் இந்த குற்றங்களுக்காக உங்கள் அரசாங்கம் தானே முன்வந்து யாரையேனும் தண்டித்திருக்கிறதா? இல்லையே!மாறாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாயாபென் கோட்னானி - அவர் மகப்பேறு மருத்துவரும்கூட - கொலைகாரர்களைத் தூண்டிக் கொண்டிருந்தார் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அலங்கரித்தீர்கள். கொலை செய்தால் அமைச்சர்! என்னே உங்கள் காருண்யம்!இந்தக் கொலைகள் நடந்து ஒரு வாரம் ஆன பின்பும் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் ஆட்கள் யாரையும் உங்கள் அரசு கைது செய்யவில்லையே என்று கேட்டபோது, யார் மீதும் புகார் வரவில்லை என்றீர்கள். அந்தக் காலத்தில் 72 மணி நேரத்தில் கலவரத்தை அடக்கிவிட்டதாக மார்தட்டினீர்கள். ஒருவேளை உண்மையாக இருக்கக் கூடும். கலவரம் என்றால் இரு தரப்பும் மோதுவது; அரசும் போலீஸும் காட்டுமிராண்டிக் கும்பலுடன் சேர்ந்துவிட்டது. வெட்டப்படுவோரும் எரிக்கப்படுவோரும் எப்படி எதிர்த்து நிற்பார்கள். உண்மையில் இப்படியரு விபரீதத்தை உலகம் கண்டிருக்காதுதான்.மோடி அவர்களே... இப்போதும்கூட மேற்கண்ட கடிதத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் குறித்து நீங்கள் பேசவில்லை; பேசமாட்டீர்கள்; 2002 செப்டம்பர் மாதத்தில் நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். நாம் ஐவர்; நமக்கு இருபத்தைவர் என்று நொந்து கிடந்த மக்களைக் கேலி செய்தீர்கள். நிவாரண முகாம்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டியபோது, குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று ஏகடியம் பேசினீர்கள். கருணை மழையே, மோடி ராசா
உங்கள் கடிதம் உண்மையும் அல்ல, உண்மை உணர்வும் அல்ல.
அந்தக் கடிதத்தில் உங்கள் நேர்மை வெளிப்படவில்லை. நீங்கள் நியமித்துள்ள 'ஆப்கோ வேர்ல்ட் வைடுநிறுவனத்தின் திறமையும், சாகசமும் வெளிப்படுகிறது. ஒப்பனைக்காரர்களின் திறமையால் யாரும் அழகாகிவிட்டதாக சொன்னால், அது உண்மையெனில், நீங்கள் கருணாமுர்த்திதான்.ஆனால் ஒன்று மோடி அவர்களே... உங்களது துக்கமே இந்த நாட்டு மக்களுக்கு இத்தனை பேரழிவைக் கொண்டுவருமென்றால் உங்களது சந்தோஷம் மனித குலத்துக்கே பேரழிவாய் முடியும். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறாதிருக்க நாகரிக சமூகத்தின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஒரு மனசாட்சியுள்ள மனிதன்   ……நன்றி  ஜூனியர் விகடன்.

1 comment:

AYYANARSAMY.R said...

WHAT HE SAID IS TO BE VERIFIED IN THE PARAGRAGH PLEASE
R.AYYANARSAMY
BSNLEU
DINDIGUL