Wednesday, 22 January 2014

போலீஸ் மீது நடவடிக்கை: கேஜ்ரிவால் தர்ணா வாபஸ்.

காவல் துறை அதிகாரிகள் இருவருக்கு எதிராக துணை நிலை ஆளுநர் நடவடிக்கையைத் தொடங்கியதால், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தனது தர்ணாவை முடித்துக் கொண்டார்.கடமை தவறியதாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் மீதும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் உறுதி அளித்துள்ளார்.முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு குற்றம்சாட்டிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் கட்டாய விடுப்பில் செல்ல துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டதன் தொடர்ச் சியாகவே, கேஜ்ரிவால் தனது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.புது டெல்லி காவல்துறையின் கட்டுப்பாடு, டெல்லி அரசுக்கே இருக்க வேண்டும், கடமை தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 மணிநேரமாக, டெல்லியின் ரயில் பவனுக்கு வெளியே, சிறப்பு பாதுகாப்புப் பகுதியில் முதல்வர் கேஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தி வந்தார். இதனால் குடியரசு தின அணிவகுப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.நேற்றிரவு சாலையில் உறங்கியும், தனது அமைச்சர்களுடன் காருக்குள் பேச்சுவார்த்தை நடத்தியும் வந்த கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் உடனான பேச்சுவார்த்தையில் மக்களுக்கு வெற்றி கிடைத்தைத் தொடர்ந்து தர்ணாவை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.முன்னதாக, எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று கூறிய கேஜ்ரிவால் ராஜ்பத் பகுதியில் தனது ஆதரவாளர்களை திரட்டி, குடியரசு தின விழாவிற்கு இடையூறு விளைவிக்கப் போவதாக அச்சுறுத்தியிருந்தார்.சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதியின் உத்தரவின் பேரில், மாள்வியா நகர் பகுதியில் நடைபெற்று வந்த போதை மருந்து விற்பனை மற்றும் பாலியல் தொழிலை விசாரிக்க மறுத்த காவல்துறை அதிகாரி மற்றும் பஹர்கஞ்ச் பகுதியில், டென்மார்க் பெண் பாலியல் தாக்குதலுக்கு ஆளான போது பொறுப்பில் இருந்த அதிகாரி இருவருக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான இந்த தர்ணா முடிவுக்கு வந்தது.தர்ணாவை முடித்துக் கொள்ளுமாறு கேஜ்ரிவாலுக்கு வேண்டுகோள் விடுத்த துணை நிலை ஆளுநர், சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையான விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.ஐந்து அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேஜ்ரிவால் கோரியிருந்தார். அதில் இரண்டு பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரதட்சிணை கொடுமையால் உறவினர்களால் ஒரு பெண் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அவர் கோரியிருந்தார்.துணை நிலை ஆளுநர் தனக்கு எழுதிய கடிதத்தை மக்கள் முன் கேஜ்ரிவால் படித்தார். புனிதமான குடியரசு தின விழா நடக்கவும், பாதுகாப்பு கருதியும் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.மேலும், பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

No comments: