Sunday, 1 September 2013

போலீஸ், நீதித் துறை மீது மக்கள் நம்பிக்கை . . .

போலீஸ், நீதித் துறை மீது மக்கள் நம்பிக்கை பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறினார்.அவர் தில்லி மனித மேம்பாட்டு அறிக்கை 2013-ஐ வெளியிட்டார். தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் முன்னிலை வகித்தார். 
தில்லியில் குற்றங்கள் அதிக அளவில் நடப்பதால் பொதுமக்கள் போலீஸ், நீதித்துறை மீது நம்பிக்கை இழந்து விட்டனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாகத்தான் அண்மையில் தில்லியில் பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இதை கவனத்தில் கொண்டு போலீஸ், நீதித்துறை மீது பொதுமக்களுக்கு  நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
பாதுகாப்பு குறைபாட்டால் பொதுமக்களின் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியோரின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இந்த மனித மேம்பாட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் உள்பட பல்வேறு துறைகளில் பரவலான குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம அளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்கள், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் மழலையர் பள்ளி, ஆரம்பப்பள்ளி போன்றவற்றை அதிக அளவில் அமைக்க வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது.அவர்கள் சமூக பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளனர். இவர்களின் குறைகளையும் அரசு தீர்க்க வேண்டும் என்றார் ஹமீத் அன்சாரி.
........தினமணி 

No comments: